பாலாரிஷ்ட தோஷம் விலகும் ஜாதக விதிகள் சில…

பாலாரிஷ்ட தோஷம் விலகும் ஜாதக விதிகள் சில

பாலாரிஷ்டம் தோஷம் என்பது குழந்தை பிறந்தததிலிருந்து முதல் 6 வயது வரை சந்திரனின் ஆதிக்க வயது காலம் ஆகும் இந்த காலங்களில் உடல்காரகன் ஆன சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும் இருக்கும் அதாவது ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த வயது காலம் வரை உடல் உள் புற உறுப்புகளின் வளர்ச்சி கட்டமைக்கபடும் காலம் ஆகும் அதிலும் முக்கியமாக மூளை, நுரையீரல், உணவுக்குழாய் மற்றும் செரிமான மண்டலம் (தாயின் இடமிருந்து பிரிந்து வந்து தனக்கான ஆற்றலை தான் பெறும் உணவில் இருந்து பெற்றுக்கொள்ளும் முக்கிய பருவம்), மலக்குடல், ஐம்புலன்கள் உணர்திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் உடல் உள் புற உறுப்புகளின் வளர்ச்சிக்கான முக்கியமான காலம் தான் இந்த 6 வயது வரையான காலம் ஆகும்.

இந்த வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கவனமாக பேண வேண்டியது ஒவ்வொரு தாய், தகப்பனின் கடமையாகும், இதில் சில குழந்தைகள் பூர்வபுண்ணிய பாவங்களினால் இந்த வயதுகாலங்களுக்குள்ளாகவே தன் வாழ்வை முடித்து கொள்கின்றன ஆனால் நாம் இப்போது அதை பற்றி பார்க்காமல் நல்லவிதமாக உள்ள அதே நேரத்தில் சிற்சில நோய் அல்லது உடல்உபாதைகளால் பாதிக்காமல் இருப்பதற்கும் அப்படி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது அந்த குழந்தையை பெரிதாக பாதிக்காமல் இருக்க வைக்கும் பாலாரிஷ்டத்தை பங்கபடுத்தும் சில சோதிட விதிகளை பார்ப்போம், பழைய சோதிட பாடல்கள் கொடுக்கும் விளக்கம் இது - 

"சிவனார் பத்தி செய்யும் பத்தர் பாபங்கள் போகும்
தவப்பயன்  போற் அந்தணர் நல்துணைவனாம்
புவனம் போற்றும் தேவ அமைச்சு சனன இலக்கின
பாவத்தில் எழுந்தருளினால் பாலத்தீட்டு போகும்"

சிவனை வணங்கி தவம் செய்யும் அவர் பக்தர்கள் பாபங்கள் எப்படி குறைவின்றி போகுமோ அது போல் தேவமந்திரி என்று அழைக்கபடும் பிரகஸ்பதி என்ற அழைக்கபடும் குரு பகவான் லக்கினத்தில் இருத்தால் குழந்தைக்கு தோன்றும் பாலாரிஷ்ட குறைவின்றி போகும்.

"சனன இலக்கினத்து நாயகனை பாபிகள் பார்க்காமல்
ஆன சுபர்களால் பார்க்கபட்டு கோண சதுரங்கள் ஏறி
சனன இலக்கினத்து நாயகன் அமைந்தால் பாலத்தீட்டு
ஈனமுற்று நற்குணமும் நாலு செல்வமும் சேரும் கேள்"

ஜென்ம லக்கினாதிபதி பாபர்களால் பார்க்காமல் இருந்து சுபர்களால் பார்க்கபட்டு லக்கினாதிபதி திரிகோண கேந்திரங்களில் இருந்தால் பாலாரிஷ்டம் பங்கபட்டு நல்ல குணங்களும் நாலுவகை செல்வங்களையும் அனுபவிப்பான்.

"பாலசந்திரன் சுபவீடுகள் போய் சேர்ந்து சுககுரு
மூலகுரு இளவரசு ஆம் மூவரும் சதுரங்கள் ஏறி
நீலன் சேர் பாபிகள் சேராமல் வளர்சந்திரனை
பலம் சேரப் பார்த்தால் பாலத்தீட்டு ஈனமுறும்"

வளர்பிறை சந்திரன் சுபத்தன்மையான ஸ்தானங்களில் இருந்து சனிமுதலான பாபிகள் சேராத சுக்கிரன், குரு, புதன் இவர்கள் மூவராலும் வளர்பிறை சந்திரன் பார்க்கபட்டால் பாலாரிஷ்ட தோஷம் போகும்.

"பூரணப்பிறையோன் போய் அமர்ந்திருந்த வீட்டிற்கு
இரண்டு புறமும் சுபக்கோள்கள் சூழ்ந்திருக்க பாலனை
திரட்டிய தீட்டுகள் போய் காவற் தெய்வங்கள் காக்கும்
கிராமத்து எல்லை போல் நோவின்றி காக்கபடுவான்"

வளர்பிறை சந்திரன் சுபத்தன்மையான ஸ்தானங்களில் இருந்து வளர்பிறை சந்திரனுக்கு இருபுறமும் சுபக்கோள்கள் இருந்தால் அந்த பால ஜாதகனின் பாலாரிஷ்ட தோஷம் போய் காவற் தெய்வங்களால் காக்கப்படும் கிராமத்து எல்லையை போல அந்த பால ஜாதகனும் நோய்களின்றி காக்கபடுவான்.


"பாலசந்திரனும் மங்களனும் நட்பிடம் போய் நவாம்ச

பலமும் பெற்று ஒருவரை ஒருவர் கண்ணுற்றாலும் நல்

கோலங்கொள் கிரகக்குருகள் இருவரை கண்ணுற்றாலும்

நிலத்தில் பாலகன் சீர்பெற்று வாழ பாலத்தீட்டு போம்"வளர்பிறை சந்திரனும் செவ்வாயும் நட்பு ராசிகள் போய் சேர்ந்து நவாம்ச வலுவும் அடைந்து ஒருவரை ஒருவர் பார்வை செய்தாலும் அல்லது இவர்கள் இருவரையும் குரு, சுக்கிரன் பார்வை செய்தாலும் அந்த குழந்தைக்கு பாலாரிஷ்ட தோஷத்தால் பாதிப்பில்லை.

இன்னும் இரண்டு மூன்று பாடல்கள் உள்ளன நேரம் அமைந்தால் பின்பு இதே பதிவிலேயே அதை தொடர்ந்து எழுதுகிறேன்.


ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "பாலாரிஷ்ட தோஷம் விலகும் ஜாதக விதிகள் சில…"

கருத்துரையிடுக

Powered by Blogger